நடப்பு 18வது ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்ய வன்ஷியை பிகார் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி பீகார் தலைநகர் பாட்னா சென்றார். பாட்னா விமான நிலையத்தில் பிரதமர் மோடியை இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்ய வன்ஷி மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்தனர்.
கடந்த மே 1ம் தேதி மும்பை- ராஜஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில், தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் சூர்ய வன்ஷி, 35 பந்துகளில் 100 ரன்கள் அடித்து சதம் படைத்தார். இது கிரிக்கெட் வீரர்களால் மட்டுமின்றி பலதரப்பினராலும் பாராட்டப்பட்டது.
இந்தநிலையில் பிரதமர் மோடி பாட்னா விமான நிலையத்தில் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் சூர்ய வன்ஷியின் கிரிக்கெட் திறமையை நாடு முழுவதும் பாரட்டியதாகவும், எதிர்கால வெற்றிகளுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.