நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்தநிலையில், மக்களவை சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டு உரையாடினர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி இன்று (டிச. 19) வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் SIR மற்றும் தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், காப்பீடு துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு, அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட, விபி ஜி ராம் ஜி மசோதா உள்ளிட்டவை விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்பட்டன.

ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெறும்போது, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எம்.பி.க்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்தநிலையில், சபாநாயகர் ஓம்பிர்லா இன்று (டிச. 19) தேநீர் விருந்து அளித்தார். இந்த முறை எதிர்க்கட்சி எம்பி.க்களும் விருந்தில் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா உள்ளிட்டோர் தேநீர் விருந்தில் கலந்து கொண்டு உரையாடினர். சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்திர யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோர் விருந்தில் பங்கேற்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version