புதுச்சேரி மாநிலம் தென்னிந்தியாவின் மிக முக்கியமான ‘மருத்துவச் சுற்றுலா மையமாக’ மாறி வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவக் கட்டமைப்புகள் இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். அங்கிருந்து லாஸ்பேட்டை ஹெலி பேடு மைதானத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி ரூ.1,571.73 கோடி மதிப்பிலான 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது தவிர பிரதமர் மோடி ரூ.1,142.23 கோடி மதிப்பில் 19 முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது விழாவில் பேசிய பிரதமர் மோடி, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் (JIPMER) போன்ற உயர்தர மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அதிநவீன தனியார் மருத்துவமனைகள், அண்டை மாநில மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பயணிகளையும் ஈர்த்து வருகின்றன.
உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் மிகக் குறைந்த செலவில் கிடைப்பதால், புதுச்சேரி மருத்துவச் சுற்றுலாவில் முன்னிலை வகிக்கிறது. ‘ஆயுஷ்மான் பாரத்’ உள்ளிட்ட திட்டங்கள் மூலம் சாமானிய மக்களுக்கும் உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்துள்ளதாகப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவச் சுற்றுலாவின் வளர்ச்சியால் புதுச்சேரியின் உள்ளூர் பொருளாதாரம், ஹோட்டல் தொழில் மற்றும் போக்குவரத்துத் துறைகள் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளன.
புதுச்சேரியை ஒரு ‘அறிவுசார் மையமாகவும், ‘ஆன்மீக மையமாகவும்’ மாற்றுவதோடு, தற்போது மருத்துவத் துறையிலும் ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதே மத்திய அரசின் இலக்கு என்று பிரதமர் மோடி தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.
