வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் தேர்தல் சீர்திருத்தம் குறித்து மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் மத்திய அரசுக்கு 3 முக்கிய கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார்.
டிசம்பர் 1ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. இதையடுத்து, டிசம்பர் 9ம் தேதி SIR தொடர்பாக விவாதம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மக்களவையில் இன்று (டிச. 9) விவாதம் நடைபெற்றது. காலையில் விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி, நடுநிலையான அமைப்பான தேர்தல் ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் சூழல் உருவானது துரதிருஷ்ட வசமானது என குறிப்பிட்டார். SIR விவகாரத்தில் வெளிப்படையான நடவடிக்கைகள் இருக்கும் வகையில் செயல்பாடுகள் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தம் குறித்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஓட்டுத் திருட்டை விட மிகப்பெரிய தேச விரோத செயல் ஏதும் இல்லை என்று கடுமையாக விமர்சித்தார். பல்வேறு முறைகேடுகள் நடந்தது குறித்து விளக்கம் கேட்டால் தேர்தல் ஆணையம் பதிலளிக்க மறுப்பதாக அவர் தெரிவித்தார். பீகாரில் SIR பணிகளுக்கு பிறகு 1.2 லட்சம் போலி வாக்காளர்கள் ஏன் இருந்தார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையம் விதிமுறைக்கு மாறாக செயல்படுவதாக ராகுல் குற்றம்சாட்டினார். தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல்கள் கட்டுப்படுத்தப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்வதற்கான தேர்வுக்குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியது ஏன் என்றும் கடந்த 2023 டிசம்பர் மாதம் பதவியில் இருக்கும் போது தேர்தல் ஆணையர் பாதிக்கப்படாத வகையில் சட்டத்தை மாற்றியது ஏன் என்றும் ஓட்டுப்பதிவு மையங்களில் உள்ள சிசிடிவிக்கள் மற்றும் தகவல்கள் குறித்த சட்டங்கள் மாற்றப்பட்டது ஏன் என்றும் 3 முக்கிய கேள்விகளை மத்திய அரசுக்கு முன்வைப்பதாக ராகுல் குறிப்பிட்டார்.
மேலும், 4 கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார். தேர்தல் நடத்துவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு, இயந்திரத்தால் படிக்கக் கூடிய வாக்காளர் பட்டியல் வழங்கப்பட வேண்டும் என்றும் சிசிடிவி பதிவுகளை அழிக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மின்னணு வாக்கு இயந்திரத்தின் கட்டமைப்பு குறித்து விளக்க வேண்டும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு வழங்கப்பட்ட அனுமதியை மாற்ற வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தி உள்ளார்.
