நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 2029-ம் ஆண்டு முதல் 33% மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்தவும் வழிவகுக்கும் வரைவு மசோதாக்களுக்கு மத்திய அரசு கடந்த 8-ம் தேதி ஒப்புதல் வழங்கியது.
இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஏப்.16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெறவே மகளிர் இடஒதுக்கீடு சட்டம் மற்றும் தொகுதி மறு வரையறை தொடர்பான மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசு நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
இதுதொடர்பாக விவாதிப்பதற்காக ஏப்.15-ம் தேதி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தவுள்ளன. டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த அனைத்து கட்சிகளின் அவை தலைவர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், விரிவான விவாதங்களுக்கு பின்னர், நாடு முழுவதும் உண்மையான மனவுறுதியுடன் நாரி சக்தி வந்தன் அதினீயம் அமல்படுத்தப்பட வேண்டிய தருணம் வந்துள்ளது என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். 2029-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களை மகளிர் இடஒதுக்கீட்டுடன் நடத்த வேண்டியது கட்டாயம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
பெண்கள் மற்றும் வருங்கால தலைமுறையினக்காக பொறுப்புணர்வுடன் கட்சிகள் நடந்து கொண்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
இந்தநிலையில், தங்களை கலந்தாலோசிக்காமல் பார்லிமென்ட் கூட்டத்தை பாஜக அரசு கூட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதிய அவசர கடிதத்தில், 5 மாநில தேர்தல்களுக்கு மத்தியில் அரசியல் ஆதாயத்திற்காகவே மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா நிறைவேற்றப்படவுள்ளதாக விமர்சித்துள்ளார். ஏப்.29-க்கு பிறகு தொகுதி மறுவரை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

