அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை அவர்களின் அசல் பணிகளைத் தவிர்த்து, அலுவலகப் பணிகள் போன்ற இதர மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) அனைத்து கிளை மேலாளர்களுக்கும் கடுமையான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, அரசுப் போக்குவரத்து கழகங்களில் நூற்றுக்கணக்கான ஓட்டுநர்களும் நடத்துநர்களும் தங்களின் அசல் பணியைச் செய்யாமல், அலுவலக உதவியாளர்களாகவும், தொழிற்சங்கப் பணிகளிலும் முழுச் சம்பளத்துடன் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
இதனால் பேருந்துகளை இயக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு, தற்காலிகப் பணியாளர்களை நியமிக்கும் நிலை உருவானதாக தெரிகிறது. இதனை கடுமையாக விமர்சித்த நீதிமன்றம், இதற்கு உடனடியாக தடை விதிக்குமாறு உத்தரவிட்டது.
ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் எந்த நோக்கத்திற்காக வேலைக்கு எடுக்கப்பட்டார்களோ, அந்தப் பணியை மட்டுமே செய்ய வேண்டும் என்றும் அவர்களை எந்தக் காரணம் கொண்டும் அலுவலகப் பணிகளுக்கு மாற்றக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. பணியின் போது விபத்து அல்லது உடல்நலக் குறைவு காரணமாக மாற்றுத்திறனாளிகளாக மாறும் பணியாளர்களுக்கு, முறையான மருத்துவக் குழுவின் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே மாற்றுப் பணிகள் (அலுவலகப் பணிகள்) வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி ஓட்டுநர், நடத்துநர்களை அலுவலகப் பணிகளில் அமர்த்தும் கிளை மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

