திருப்பூரில் YouTube வீடியோக்களைப் பார்த்துவிட்டு, மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்ற இளம்பெண் ஒருவர் அதிகப்படியான ரத்தப்போக்கு காரணமாக பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள தளவாய்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா. இவருக்கு ஏற்கனவே முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. இந்நிலையில், தனது இரண்டாவது குழந்தையை முற்றிலும் இயற்கையான முறையில் பெற்றெடுக்க வேண்டும் என்று சசிகலா விரும்பியதாக தெரிகிறது. இதற்காக அவரும், அவரது கணவர் மற்றும் மாமியாரும் மருத்துவமனைக்குச் சென்று பிரசவம் பார்ப்பதை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
மருத்துவ கண்காணிப்பு இல்லாமல், YouTube-ல் பிரசவம் பார்ப்பது குறித்த வீடியோக்களைத் தொடர்ந்து பார்த்துவிட்டு, ஜூன் 25 வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றுள்ளனர். பிரசவத்தின் போது குழந்தை பாதுகாப்பாக வெளியே வந்த போதிலும், நஞ்சுக்கொடி சரியாக பிரியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதனால் சசிகலாவிற்கு கடுமையான மற்றும் கட்டுப்படுத்த முடியாத ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, உடனடியாக சசிகலாவை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், ரத்த இழப்பு மிக அதிகமாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக, மருத்துவர்கள் குழந்தையை மீட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

