மகாராஷ்ட்ர சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலின் போது மாலை 5 மணியளவில் பதிவான சிசிடிவி காட்சிகளை வெளியிட முடியுமா என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
மகாராஷ்ட்ர மாநில சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில் முதலாவதாக தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவை மத்திய அரசு மாற்றி அமைத்தது குறித்து கேள்வி எழுப்பினார். இரண்டாவதாக போலியான வாக்காளர்களை சேர்த்தது. மூன்றாவதாக வாக்கு சதவிதம் அதிகமானது. நான்காவதாக போலி வாக்குகள் அதிகரித்தது என குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதற்கு நேரடியாக தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை. மாறாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பலரும், மகாராஷ்ட்ர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே போன்றவர்கள் பதில் கூறி இருந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதில், நீங்கள் (தேர்தல் ஆணையம்) அதிகாரபூர்வமாக கையெழுத்து இடவேண்டியவர்கள் பதில் கூறாமல், இடைத்தரர்கள் போன்றவர்கள் மூலமாக அதுவும் மிகவும் முக்கியமான பிரச்னைக்கு பதில் கிடைப்பது சரியான அணுகுமுறை அல்ல என்று கூறியுள்ளார். உங்களிடம் மறைக்க எதுவும் இல்லையென்றால், எனது கட்டுரையில் உள்ள கேள்விகளுக்கு பதிலளித்து அதை நிரூபிக்கவும்:
* மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான சமீபத்திய தேர்தல்களுக்கான ஒருங்கிணைந்த, டிஜிட்டல், இயந்திரம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிடுதல்
* மகாராஷ்டிரா வாக்குச் சாவடிகளில் இருந்து மாலை 5 மணிக்குப் பிறகு அனைத்து சிசிடிவி காட்சிகளையும் வெளியிடுதல். இதனை தவிர்க்கும் செயல் உங்கள் நம்பகத்தன்மையைப் பாதுகாக்காது. உண்மையைச் சொல்வது நல்லது என்று ராகுல் கூறியுள்ளார்.