மார்க்சிஸ்ட் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசிய கருத்து, அவரது முதிர்ச்சியற்ற தனமையை காட்டுவதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார்.
கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் 2ம் ஆண்டு நினைவு நாளையொட்டி கேரளாவில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இண்டியா கூட்டணியின் ஆதரவு கட்சிகளை தாக்கி அவர் பேசியிருந்தார்.
ஆர்.எஸ்.எஸ்., மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியை எதிர்த்து சித்தாந்த ரீதியாக களத்திலும், கருத்துகளிலும் போராடி வருவதாகவும், அவர்கள் மக்களை பற்றி நினைப்பதில்லை என்று அவர் கூறியிருந்தார். இதற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராகுலின் இந்தப் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதவெறி பா.ஜ., -ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல், மார்க்சிஸ்ட் கட்சி, ஆர்.எஸ்.எஸ்., ஆகியவற்றை சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிர்த்து போராடுகிறேன் என்று பேசியிருப்பது. அவரது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. மார்க்சிஸ்ட் கட்சி இல்லாமல் மதசார்பின்மையை பாதுகாக்க முடியுமா?, எனக் குறிப்பிட்டுள்ளார்.