புதுச்சேரி மாநிலத்தின் 16-வது சட்டமன்ற முதலமைச்சராக என்,ஆர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பதவி ஏற்றார். லோக் நிவாசில் (ஆளுநர் மாளிகை) நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து பாஜகவின் நமச்சிவாயம் மற்றும் என்.ஆர்.காங்கிரஸின் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் கலந்து கொண்டார்.

அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்ட நமச்சிவாயம் மற்றும் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோருக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. புதிய அமைச்சர்கள் வரும் 18- ஆம் தேதி பதவி ஏற்கும் போது மற்ற அமைச்சர்களுடன் சேர்த்து இலாகா ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள  என். ரங்கசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான நிர்வாகியாகப் பெயர் பெற்ற அவர், புதுச்சேரியின் வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்தியுள்ளார். புதுச்சேரி மக்களின் நலனுக்காக அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரது இந்த பதவிக்காலம் சிறப்பாக அமைய எனது நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version