தவெக அரசுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முதலமைச்சர் விஜய் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறிச் செயல்பட்ட உறுப்பினர்கள், “அதிமுகவிற்குத் துரோகம் விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டுள்ளனர். அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி, தமிழக வெற்றிக் கழகம் தனது கூட்டணியில் இணைத்துள்ளது. தூய்மையான அரசியல் என்று பேசிவிட்டு, ஆரம்ப காலத்திலேயே முதலமைச்சர் விஜய் தவறான பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டார்” எனச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகம் வெறும் 106 இடங்களை மட்டுமே வைத்துள்ளது. திமுக கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் இந்த அரசு தப்பித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், 66% வாக்காளர்கள் இந்த அரசுக்கு எதிராகவே உள்ளனர். சட்டப்படி பொதுச்செயலாளர் நியமிக்கும் சட்டமன்றக் குழுத் தலைவரும், கொறடாவும் பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானது. ஆனால், அந்த விதிகளை மீறித் துரோகம் செய்துள்ளனர்” என்றார்.
முன்னாள் அமைச்சர்கள் சிலர் பதவி ஆசைக்காகத் தவறான வழியில் செல்வது சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பானது என்று குறிப்பிட்ட அவர், “அதிமுக ஒரு வலிமையான இயக்கம். எத்தனையோ கட்சிகள் இதுபோலப் பிரிந்துள்ளன; இயக்கங்களுக்குச் சோதனைகள் வருவது இயற்கை. ஆட்சி என்பது மாறி மாறி வரும், ஆனால் தர்மம் நிலைக்கும். மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனையின் பேரிலேயே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர், இதில் தனிப்பட்ட முடிவுகள் ஏதுமில்லை” எனத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
