கோவாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாக இருப்பது கோவா. யுனியன் பிரதேசமான கோவாவிற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர்.
அவ்வாறு வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அனுமதியின்றி படகுகளை இயக்குதல், சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துதல்,
சுற்றுலா பொருட்களை வாங்கக்கோரி வியாபாரிகள் கட்டாயப்படுத்துதல், அனுமதிக்கப்படாத பகுதிகளில் மது அருந்துதல், பொதுஇடங்களில் சமைத்தல், அனுமதிக்கப்படாத பகுதிகளில் தண்ணீர் விளையாட்டு, டிக்கெட் விற்பனை, பிச்சை எடுத்தல், கடற்கரைகளில் வாகனங்களை இயக்குதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சம்பவங்களை தடுக்க கோவா அரசு அபராதம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கோவாவில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் மீது குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ. 1 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமாக அமலாகவுள்ளது.