ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் பாங்கரவாதிகளின் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரிக்க, அமெரிக்கா தலையீடின் படி இரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்தனர். பாகிஸ்தானின் அத்துமீறிய டிரோன் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்த காட்சிகளும் இணையத்தில் வைரலானது. இந்திய ராணுவ வீரர்களின் சாதனை அளப்பரியது என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
இதனிடையே இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
இதனை விமர்சிக்கும் விதமாக, பிரதமர் மோடிக்கு தான் திமுகவினர் நன்றி செலுத்த வேண்டுமே தவிர இந்திய ராணுவத்திற்கு அல்ல, என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசு தான்.”பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார். எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்” செல்லூர் ராஜு தெரிவித்தார்.
செல்லூர் ராஜூவின் இத்தகைய கருத்தை கண்டித்து கரூரில் முன்னாள் ராணுவத்தினர் போராட்டம் நடத்தினர். எல்லை வீரர்களை விமர்சித்த செல்லூர் ராஜு தனது பேச்சை திரும்ப பெற்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மீண்டும் அவர் தேர்தலில் நின்றால் அவருக்கு எதிராக அவரது தொகுதியில் பிரசாரம் செய்வோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர். அதேப் போல அரியலூரிலும், செல்லூர் ராஜூவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்லூர் ராஜூவுக்கு எதிராக தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுதப்படை நல மற்றும் மறுவாழ்வு சங்கமும் போராட்டம் அறிவித்துள்ளது.