விருந்தின்போது துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருடன் பேசியது என்ன என்பது குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேட்டியளித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் பதவித் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களான அவர்கள் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், சித்தராமையாவுக்கு தனது வீட்டில் டி.கே. சிவக்குமார் இன்று காலை விருந்து வைத்தார். கர்நாடக அரசியலில் பெரும் திருப்பமாக இது பார்க்கப்படுகிறது.
இந்த விருந்திற்கு பிறகு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது சித்தராமையா கூறியதாவது:
டி.கே. சிவக்குமார் ஏற்கெனவே எனது வீட்டிற்கு காலை உணவு சாப்பிட வந்தார். அதன்பிறகு அவர் அழைப்பை ஏற்று, இன்று நான் அவரின் வீட்டிற்கு காலை உணவு சாப்பிட வந்தேன்.
கட்சி விவகாரங்கள் குறித்து நாங்கள் 2 பேரும் பேசினோம். மிக முக்கியமாக, அடுத்த வாரம் கூடவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து ஆலோசனை நடத்தினோம்.
எதிர்கட்சியினர் எனது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர போவதாக தெரிவித்துள்ளனர். அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளை எதிர்க்க பாஜக, மஜத திட்டமிட்டுள்ளன.
இதை எதிர்கொள்வது குறித்தும், நாங்கள் 2 பேரும் இன்று பேசினோம்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
