கேரள மாநிலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக, குளிர்ச்சியைத் தேடி பாம்புகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதும், மனிதர்களைத் தாக்குவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 54 பேர் பாம்பு கடிக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, நேற்று ஒரே நாளில் ஒரு பச்சிளம் குழந்தை உட்பட 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவின் புவியியல் அமைப்பின்படி மலைக்காடுகள் அதிகம் உள்ளதால், கோடை வெப்பத்தைத் தணிக்க பாம்புகள் வீடுகளின் கழிவறை, சமையலறை மற்றும் குளிர்ந்த இடங்களை நோக்கிப் படையெடுப்பதே இந்த அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் போதுமான அளவு ‘ஆன்டி-வெனம்’ எனப்படும் பாம்பு கடி எதிர்ப்பு மருந்துகளைக் கையிருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எவ்வித தட்டுப்பாடும் இன்றி நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய சுகாதாரத் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறிவுறுத்தல்களில், இரவு நேரங்களில் தரைத்தளத்தில் தூங்குவதைத் தவிர்க்குமாறும், வீட்டைச் சுற்றியுள்ள புதர்களை அப்புறப்படுத்தித் தூய்மையாக வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், காலணிகளை அணியும்போதும், இருட்டான இடங்களுக்குச் செல்லும்போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. பாம்பு கடி ஏற்பட்டால் எந்தவித நாட்டு மருத்துவத்தையும் நாடாமல், பொன்னான நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version