சமூக ஊடகங்களில் கொக்கரிப்போர் கவனத்திற்கு..
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போர்ச் சூழல் தீவிரமடைந்து வருகிறது. பயங்கரவாத மையங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ராணுவ தளங்கள் தாக்கப்பட்டுள்ளன. ஏவுகணைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன. இவை சரியா தவறா என்ற வாதங்களும் நாட்டுக்குள் பறந்து கொண்டிருக்கின்றன. உண்மையில், போர் முகத்தை விடவும் சமூக ஊடகங்கங்களில் போர் குறித்த ஆவேசம் கலவரமாய் வெடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ஏற்படும் பதற்றமே நமக்கிருக்கும் முக்கிய கடமையை அறிவுறுத்துகிறது. அது என்ன?
மீண்டும் ஒருமுறை ‘பின்னணி’யைப் பார்ப்போம்…
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரம் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்தான் இதன் ஆரம்பப் புள்ளி. அதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். கணவனை இழந்த பெண், அவரது சடலத்திற்கு அருகே மனமுடைந்து அமர்ந்திருந்த அந்நிகழ்வின் புகைப்படம் சமூக ஊடகங்களில் தீ போல் பரவியது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்தான் இது என்று இந்திய உளவுத்துறை தெரிவித்தது. அந்தப் புகைப்படமும் அதன் பின்னணியான நிகழ்வும் நாட்டு மக்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. இந்தியா பதிலடி கொடுக்கத்தான் வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. அதன் விளைவாகவே கடந்த 7-ம் தேதி அதிகாலை இந்தியா ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கி, பதிலடியை ஆரம்பித்தது.
நடப்பது போரா? பதிலடியா?
ஆபரேஷன் சிந்தூரின் முதல் செயல்பாடே, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9-க்கும் மேற்பட்ட பயங்கரவாத மையங்களைத் தகர்த்து அழித்ததுதான். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இது பதில் தாக்குதல், அவ்வளவுதானே! என்றால் பாகிஸ்தான் தரப்பில் அப்பொழுதே இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. மேலும் இந்தத் தாக்குதலால் கோபமடைந்த பாகிஸ்தான், அடுத்த நாள் இந்தியாவை நோக்கி ஏவுகணைகளை அனுப்பியது. அதை இந்திய ராணுவம் நடுவானிலேயே முறியடித்தது. இப்படித்தான் பதிலடிக்குப் பதிலடிகள் சேர்ந்து போர் ஆனது.
செய்திகள் உண்மையா? போலியா?
ஆனால், சமூக ஊடகங்களில் ஆபரேஷன் சிந்தூர் அறிவிக்கப்பட்ட உடனேயே போரை நிறுத்தங்கள் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டு விட்டது. அத்தோடு நிற்காமல் இந்தியா, பாகிஸ்தான் இரு தரப்பிலிருந்தும் பல போலி தகவல்கள் சமூக ஊடகங்களை நிரப்பத் தொடங்கின. இப்போதுவரை அது நடந்துகொண்டுதான் இருக்கிறது. “இந்தியாவின் 15 ஏவுகணைகளைப் பாகிஸ்தான் தாக்கி அழித்திருக்கிறது, ஸ்ரீநகரின் விமானப்படை தளத்தைப் பாகிஸ்தான் விமானப்படை அழித்துவிட்டது” என்பது போன்ற பல வதந்திகள் சமூக ஊடகங்களில் சுற்றி வருகிறது. பாகிஸ்தான் திட்டமிட்டே போலி செய்திகளைப் பரப்பி, மக்களைப் பதற்றத்திற்கு உள்ளாகுவதாக இந்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இதற்குச் மகுடம் வைத்ததுபோல் பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்டு, பின்னர் சமூக ஊடகப் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவே சமூக ஊடகத்தில் வரும் செய்திகளின் நம்பத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சமூக ஊடகங்கள் மட்டுமின்றி சில பிரதான ஊடகங்களும் இத்தகைய வதந்திகளை அவசரத்தின் பெயரில் உடனே வெளியிட்டு மக்களிடம் பதற்றத்தை அதிகரிப்பதும் தவிர்க்க முடியாததாய் இருக்கிறது.
கணக்கு முடக்கமும் கருத்து சுதந்திரமும்
இதற்கிடையில், சுமார் 8000 கணக்குகளை எக்ஸ் தளத்திலிருந்து முடக்க வேண்டும் என்று இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியில், பாகிஸ்தான் – இந்தியா போர்ச் சூழல் குறித்து வதந்திகளைப் பரப்பி வரும் 8000 கணக்குகளைக் கண்டறிந்த இந்திய அரசு, அவற்றை முடக்கக் கோரிக்கை விடுத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், வதந்திகள் குறித்த போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப் படாததால் போர்ப் பதற்றம் கருதி இந்தியாவில் மட்டும் அந்தக் கணக்குகளைத் தற்காலிகமாக முடக்க உள்ளதாக எக்ஸ் நிறுவனம் கூறியிருக்கிறது. மற்ற நாடுகளில் அக்கணக்குகள் தெரியும் என்றும், இதுவே கருத்து சுதந்திரத்திற்குப் பாதிப்பு வராதபடி நடந்துகொள்ளும் முறை என்றும் குறிப்பிட்டிருக்கிறது. மறுபுறம் போர்ச் சூழல் குறித்த மோசமான விமர்சனங்களை வைக்கும் பலரைக் காவல்துறையினர் கைது செய்தும் வருகின்றனர்.
நமது கடமை என்ன?
தாக்குதலோ, பதில் தாக்குதலோ எதற்கும் போர் தீர்வாகாது. ஆனால் போரை விடவும் போர் குறித்த வதந்திகள் ஆபத்தானவை. அதனால் இயன்றவரை அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்பி நமது கருத்துகளைக் கட்டமைக்க வேண்டும். எதுவும் வேகமாகப் பரவும் சமூக ஊடகத்தைக் கையில் வைத்திருக்கும் பொதுமக்கள், இதுபோன்ற சூழல்களில் உச்சபட்ச மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். போர் அல்லது தாக்குதல் குறித்த தகவல்கள் எது கிடைத்தாலும் அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்த பிறகே வெளியிட வேண்டும். செய்தி ஊடகங்கள் போர் விஷயத்தில் அவசரமோ அலங்காரமோ காட்டாமல் ஆராய்ந்து பார்த்து, உண்மையான செய்திகளை மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பார்வையாளர்களைக் கவரும் பிரேக்கிங் நியூஸ் போட்டிகளுக்கு இது நேரமில்லை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். இந்தப் புரிதலே போரைச் சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை.