நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிராக ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP) தலைமையில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் குறித்து நடிகை கத்ரீனா கைஃப் மௌனம் காத்து வருவதால், சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சை வெடிந்துள்ளது. இந்த விவகாரத்தில் நடிகை கருத்துத் தெரிவிக்கக் கோரி, 70,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த அவரது முக்கிய ரசிகர் பக்கம் ஒன்று திடீரென மூடக்கப்பட்டுள்ளது
இந்திய மாணவர்களைப் பாதிக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை குறித்துத் தங்களுக்குப் பிடித்தமான நடிகை பேசத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளதுடன், பயனர்களிடையே கலவையான எதிர்வினைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அந்த ரசிகர் பக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் சிறுவயதிலிருந்தே உங்கள் ரசிகன், ஆனால் உங்களை மனதார நேசிக்கும் எங்களைப் போன்ற இந்தியர்கள் மற்றும் மாணவர்களுக்காக உங்களால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. அரசாங்கத்திற்கு எதிராகப் பேச உங்களுக்குத் துணிச்சல் இல்லை. நீங்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தபோது நாங்கள் உங்களை ஆதரித்த வேளையில், நீங்கள் எங்களுக்குத் துரோகம் செய்துவிட்டீர்கள். நான் உங்களைப் பின்தொடர்வதை நிறுத்திக்கொள்கிறேன், இந்த ரசிகர் பக்கத்தையும் மூடுகிறேன். இதற்கு நீங்கள் தகுதியானவர் அல்ல” என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
தனியார் ஆங்கில செய்தியின்படி, ரசிகர் பக்கத்தின் இந்த அதிரடி முடிவிற்கு சமூக வலைதளப் பயனர்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. பல பயனர்கள் நிர்வாகியின் முடிவைப் பாராட்டி கருத்துத் தெரிவித்தனர். அதில் ஒரு பயனர் “நிர்வாகிக்கு மரியாதை” என்று குறிப்பிட்ட நிலையில், மற்றொருவர் “நீங்கள் ரசிகர் பக்கத்தை மூடுவதில் எனக்கு மகிழ்ச்சி” என்றார்.
அதே நேரத்தில், கத்ரீனா கைஃபின் சில தீவிர ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கினர். பிரபலங்கள் எதை ஆதரிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கு முழு உரிமை உண்டு என்று வாதிட்ட அவர்கள், “நீங்கள் ஒரு ஜனநாயகத்தில் வாழ்கிறீர்கள் என்றால், அவரும் அப்படித்தான் வாழ்கிறார். நீங்கள் எதை ஆதரிக்க விரும்புகிறீர்கள் என்பதை உங்களால் தேர்ந்தெடுக்க முடிந்தால், அவராலும் முடியும். மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பதற்காக அவர்களை மிரட்டுவதை நிறுத்துங்கள். அவர் ஒரு வயது வந்தவர், எது சரி எது தவறு என்று அவருக்குத் தெரியும்” என்று ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
தற்போதைய மாணவர் போராட்டங்கள் குறித்து கத்ரீனா கைஃப் மௌனம் காத்து வரும் அதேவேளையில், ஷபானா ஆஸ்மி, பிரீத்தி ஜிந்தா, ரித்தீஷ் தேஷ்முக், சோனு சூட், சோனாக்ஷி சின்ஹா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் மாணவர்களுக்கு வெளிப்படையாகத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. பிரபலங்களின் மௌனமும் ரசிகர்களின் எதிர்வினைகளும் தற்போது பாலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
