டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் உமர், தாக்குதலுக்கு முன்பாக பேசி பதிவு செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே சிக்னலில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பரபரப்பான மாலை நேரத்தில் நிகழ்ந்த பயங்கர கார் வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளநிலையில், படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றர்.

கார் வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் என உறுதிப்படுத்தி உள்ள தேசிய புலனாய்வு முகமை, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 73 பேரிடம் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சம்பவம் நடந்த டெல்லி, வெடிபொருட்கள் சேகரிக்கப்பட்ட அரியானா, உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பல்வேறு சோதனைகளும், விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், அரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-பலா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 25 இடங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 மருத்துவர்கள் உள்பட 4 பேரை NIA விடுவிடுத்துள்ளது. 3 நாட்கள் நடைபெற்ற தொடர் விசாரணைக்குப் பிறகு, தாக்குதல் சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பில்லை என தெரியவந்ததையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கார் வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அமீர் ரஷீத் அலியை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க NIA-வுக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்தநிலையில், டெல்லி கார் வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு முன்னதாக  தாக்குதலை நிகழ்த்தி உயிரிழந்த மருத்துவர் உமர் முகமது பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், இஸ்லாத்தில் தற்கொலை என்பது தியாகச் செயல் என்றும் தற்கொலைத் தாக்குதல் என்பதும் தியாகச் செயல் என்றும் உமர் பேசி உள்ளார். தற்கொலை பற்றி அனைவராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக பேசி உள்ள உமர், யார், எங்கு, எப்போது இறப்பார்கள் என யாருக்கும் தெரியாது என்பதால், மரணத்திற்கு அஞ்ச வேண்டாம் என பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version