ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் திரைத்திறை பங்களிப்புக்காக கவுரவ ஆஸ்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
ஹாலிவுட் சினிமாவில் தனது தனித்துவமான சண்டைக் காட்சிகள் மற்றும் நடிப்பால் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் டாம் குரூஸ். நாம் பார்க்கும் சண்டைக் காட்சி உண்மையில் தத்ரூப வடிவமா அல்லது கிராபிக்ஸ் வடிவமா என யோசிக்கும் அளவிற்கு எந்தவித டூப்பும் இல்லாமல் தனது உயிரை பணயம் வைத்து சண்டைக் காட்சிகளில் வித்தை காட்டும் கெட்டிக்காரர் டாம் குரூஸ்.
நடிகர்கள் அனைவருக்கும் தங்கள் வாழ்நாள் கனவாக ஆஸ்கார் விருது பெறும் எண்ணம் இருக்கும். அந்தவகையில் 63 வயதான டாம் குரூஸின் பெயர் இதுவரை 4 முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டும், சில காரணங்களால் விருதை பெற முடியாமல் போயுள்ளது. ‘பார்ன் ஆன் தி போர்த்’ ‘ஆப் ஜூலை’ மற்றும் ‘ஜெரி மகுயர்’ ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்காகவும், ‘மேக்னோலியா’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்காவும், ‘டாப் கன்:மாவெரிக்’ திரைப்படத்திற்காக சிறந்த தயாரிப்பாளருக்காகவும் இவரது பெயர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்தநிலையில், 1981 முதல் தற்போது வரை துடிப்பாக நடித்துக் கொண்டிருக்கும் டாம் குரூஸ்-க்கு ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) இரவு அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. விருதை வென்ற டாம் குரூஸ், ‘நாம் எங்கிருந்து வந்தாலும் திரையரங்கம் என்று வந்துவிட்டால் அங்கே ஒன்றாக சிரிக்கிறோம், ஒன்றாக உணர்கிறோம், ஒரு விஷயத்தை அனைவரும் ஒன்றாக நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். அதுவே கலை வடிவின் சக்தி என தெரிவித்துள்ள அவர், திரைப்படங்களை உருவாக்குவது தனது வேலை அல்ல என்றும் அதுவே தனது வாழ்க்கை என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
4 முறை ஆஸ்கார் விருதை வென்ற புகழ்பெற்ற மெக்சிகன் இயக்குனர் அலஜென்ரோ கோன்சலாஸ் இன்னாரிடுயிடம் இருந்து கவுரவ ஆஸ்கார் விருதை டாம் குரூஸ் பெற்றுக் கொண்டார்.
தற்போது இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
