இஸ்ரோவின் LVM -3 என்ற பாகுபலி ராக்கெட் மூலம் அமெரிக்காவின் ‘புளூபேர்ட்-6’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, உள்நாட்டு தேவை மற்றும் வளர்ச்சிக்கான செயற்கைக்கோளுடன் வணிக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி அமெரிக்காவின் AST ஸ்பேஸ் மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட்-6 எனும் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளை, இஸ்ரோவின் LVM -3 ராக்கெட் மூலம் செலுத்த திட்டமிடப்பட்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று (டிச. 24) காலை 8.54 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான LVM- 3 மூலம் புளூபேர்ட்-6 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடை கொண்ட ராக்கெட் LVM- 3 என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.5 டன் எடை கொண்ட ‘புளூபேர்ட்-6′ என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு உள்ளது. விண்வெளியில் இருந்து நேரடியாக செல்போன்களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்குவதுதான் இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கமாகும். இதன்மூலம் செல்போன் டவர்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள், குறுஞ்செய்தி சேவைகளைப் பெற முடியும்.
ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தியதிலேயே இதுதான் அதிக எடையுள்ள செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.
