பீகார் தேர்தல் முடிவுகள் மூலம் மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணியின் வெற்றிக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, நாடியா மாவட்டத்தில் உள்ள தாஹேர்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார். ஆனால் மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தரையிறக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து பாதுகாப்பு காரணத்தையடுத்து, பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தகாவுக்கு திரும்பியது. பிரதமரின் வருகைக்காக மாநாட்டு திடலில் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். இந்தநிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால், மாநாட்டு திடலில் காத்திருந்தவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், விழாவில் பங்கேற்க வந்த பாஜ தொண்டர்களில் சிலர் ரயில் விபத்தில் உயிரிழந்ததை அறிந்து வருந்துவதாக குறிப்பிட்டார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

விரைவான வளர்ச்சியை நாடு எதிர் நோக்கி உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, மீண்டும் வளர்ச்சியை நோக்கி செல்ல பீகாரில் பாஜக கூட்டணிக்கு மக்கள் மாபெரும் ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளதாக கூறினார். பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணியின் வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் காட்டு ராஜ்ஜியத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஊடுருவல்காரர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாக இருப்பதற்கு, SIR-ஐ அந்த கட்சி எதிர்ப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது என தெரிவித்தார். பாஜகவையும், தன்னையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எந்தளவு வேண்டுமானாலும் எதிர்க்கலாம் பேசலாம் என்று கூறிய அவர், ஆனால் மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்கக் கூடாது என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version