தான் எழுப்பிய கருத்துக்கள் மற்றும் பிரச்சினைகளுக்குப் பயந்துதான் பிரதமர் மோடி மக்களவைக்கு வர அஞ்சுகிறார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதியதாக கூறப்படும் புத்தகத்தை மேற்கோள் காட்டி, 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து தான் பேசியதால், பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரப் பயப்படுகிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமரை அச்சுறுத்துகிறார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய ராகுல், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் தான் எழுப்பக்கூடாது என்பதற்காகவே அரசு அவையை ஒத்திவைத்தது என்றும் குற்றம் சாட்டினார்.
நரவணேவின் குறிப்புகள் வெளியிடப்பட்டுவிட்டன, அதன் நகல் தன்னிடம் உள்ளது என்றும் கூறிய ராகுல் காந்தி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் பொய் சொல்லியிருக்கிறார் என்று குற்றம்சாட்டினார். மேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டி, அந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
“பிரதமர் அவைக்கு வர அஞ்சினார். அது உறுப்பினர்களைக் கண்டு அல்ல; நான் கூறிய உண்மைகளைக் கண்டு தான். உண்மையை எதிர்கொள்ள முடியாததால் அவர் இன்னும் பயந்துக்கொண்டே இருக்கிறார். எங்கள் கட்சி உறுப்பினர்கள் பிரதமரை தாக்குவார்கள் என்ற கேள்வியே இல்லை. அவைக்கு வந்து பேசும் தைரியம் அவருக்கு இருக்க வேண்டும்,” என்று காந்தி தெரிவித்தார்.
மேலும் யாராவது பிரதமரை தாக்கப்போகிறேன் என்று கூறியிருந்தால், உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்யுங்கள். அந்த நபரை கைது செய்யுங்கள் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். அதை ஏன் செய்யவில்லை? நடந்தது இதுதான்,” என்று கூறினார்.
முழு எதிர்க்கட்சியும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த ஆர்வமாக இருப்பதாக காந்தி கூறினார், ஆனால் அது நடக்க வேண்டுமானால், அவர்களின் நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்காவுடனான சமீபத்திய வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, 2026-27 மத்திய பட்ஜெட் குறித்து விவாதம் நடத்த அரசாங்கம் விரும்பவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
பட்ஜெட் மீது விவாதம் நடத்த அரசு அஞ்சுகிறது. ஏனென்றால், அமெரிக்க ஒப்பந்தம், அது செய்யப்பட்ட விதம், என்ன நடந்தது, நமது விவசாயிகள் மீது அதன் தாக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்பதாலேயே அதை அரசாங்கம் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
