2020-ம் ஆண்டு உலகையே புரட்டிப்போட்ட கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அலை ஒன்று அலை 2 என அலை, அலையாக பரவிய கொரொனா பெருந்தொற்று, அலை, அலையாக மக்களை கொண்டு சென்றது. இதற்காக உலகம் முழுவதும் பல ஆராய்ச்சியாளர்கள் இரவு பகலாக உழைத்து தடுப்பூசியை உருவாக்கினர். இந்தியாவை பொருத்தவரை, கோவேக்சின், கோவிசீல்டு என இருவகையான கொரோனா தடுப்பூசிகள் இரண்டு தடவையாக செலுத்தப்பட்டது.

அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். தற்போது மீண்டும் கொரோனா பரவுவதாக தகவல்கள் வெளியனது மக்களிடையே மீண்டும் பீதியை ஏற்படுத்தியது. இது கொரோனா அளவு வீரியம் கொண்டது அல்ல, வெறும் மைக்ரான் தான் என கூறப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் கொரோனா ஓய்ந்த பிறகு அடுத்தடுத்து மாரடைப்பால் பலர் உயிரிழந்தனர். இதற்கு காரணம் கொரோனா காலத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசி தான் எனக் கூறப்பட்டது.

தற்போது மீண்டும் அதுபோன்ற தொடர் மரணங்கள் ஏற்படுவதால், மீண்டும் இந்த பேச்சு தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் கடந்த மாதத்தில் மட்டும் ஹாசன் என்ற மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில முதலமைச்சர் சித்தாரமையா, , “கடந்த ஒரு மாதத்தில், ஹாசன் மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த விஷயத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இந்த தொடர் மரணங்களுக்கான சரியான காரணத்தை கண்டறிந்து, தீர்வுகளைக் கண்டறிய, ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ரவீந்திரநாத் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 நாட்களுக்குள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே குழுவிற்கு கடந்த பிப்ரவரி மாதமே, மாநிலத்தில் இளம் வயதினர் மத்தியில் திடீர் மரணங்களுக்கான காரணங்கள் மற்றும் கோவிட் தடுப்பூசிகளால் ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து ஒரு முழுமையான ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

இந்த தொடர்பாக, இதய நோயாளிகளை பரிசோதிக்கும் மற்றும் பகுப்பாய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் தங்கள் முழு வாழ்க்கையும் எதிர்காலத்தில் இருக்கும் அப்பாவி மக்களின் உயிர்களுக்கும் நாங்களும் மதிப்பளிக்கிறோம், அவர்களின் குடும்பங்களின் கவலைகளை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். இதுபோன்ற விஷயங்களை தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தும் பாஜக தலைவர்களின் செயல்களை நான் கண்டிக்கிறேன். கோவிட் தடுப்பூசியை அவசரமாக அங்கீகரித்து பொதுமக்களுக்கு விநியோகித்தது இந்த மரணங்களுக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் உலகெங்கிலும் சமீபத்திய ஆய்வுகள் கோவிட் தடுப்பூசிகள் மாரடைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த விஷயத்தில் பாஜக எங்களை விமர்சிப்பதற்கு முன்பு, அவர்கள் தங்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ள வேண்டும். ஹாசன் மாவட்டத்திலும் மாநிலம் முழுவதும் இந்த திடீர் தொடர் மரணங்களுக்குப் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தைக் கண்டறிந்து அவற்றை தடுப்பதில் நாங்கள் முழுமையாக உறுதியாக உள்ளோம்.

ஒரு அரசாங்கமாக, மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நாங்கள் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். நெஞ்சுவலி அல்லது மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையத்திற்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் “கொரோனா தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை” என்று மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கொரோனாவுக்கு பிந்தைய பெரியவர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்து ICMR (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) மற்றும் AIIMS ஆகியவற்றின் விரிவான ஆய்வுகள், கொரோனா தடுப்பூசிகளுக்கும் திடீர் மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதியாகக் கண்டறிந்துள்ளன

கொரோனா தடுப்பூசி ஆபத்தை அதிகரிப்பதாகத் தெரியவில்லை. வாழ்க்கை முறை மற்றும் ஏற்கனவே உள்ள நிலைமைகள் முக்கிய காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் ICMR மற்றும் AIIMS நடத்திய விரிவான ஆய்வுகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்றும், மிகவும் அரிதான நிகழ்வுகளில் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என்றும் ICMR மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) ஆகியவற்றின் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

திடீர் இதய இறப்புகள் மரபியல், வாழ்க்கை முறை, முன்பே இருக்கும் நிலைமைகள் மற்றும் கொரோனவுக்கு பிந்தைய சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். கொரோனா தடுப்பூசியை திடீர் மரணங்களுடன் இணைக்கும் கருத்துகள் தவறானவை.
அது தவறாக வழிநடத்தும். இதனை அறிவியல் ஒருமித்த கருத்து ஆதரிக்கப்படவில்லை என்றும் அறிவியல் நிபுணர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version