மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்த விமான விபத்தில், அவர் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவ், உதவியாளர் பிங்கி மாலி, தலைமை விமானி சாஹில் மதன், துணை விமானி ஷம்பவி பதக் ஆகியோர் உயிரிழந்தனர்.
விமான விபத்து சம்பவம் காலை 8:44 மணிக்கு நிகழ்ந்தது. மும்பை-பாராமதி பயணத்திற்காக VSR Ventures-ஐ சேர்ந்த Learjet 45 (VT-SSK) விமானம் மும்பையிலிருந்து கிளம்பியது. விமானிகள் முதல்முறையாக தரையிறங்க முயன்ற போது ஓடுதளம் சரியாக தெரியவில்லை எனத் தெரிவித்ததால் தரையிறங்காமல் மேலெழும்பினர். இரண்டாவது முயற்சியில் ஓடுதளம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த நிமிடத்தில் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்தது. விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் மகாராஷ்டிரா அரசு இந்த விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.
AAIB (Aviation Accident Investigation Bureau) தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றது. விசாரணை முடிவுகள் வெளியாகும் போது விபத்துக்கான காரணங்கள் தெளிவாக வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவரது மறைவால் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி மற்றும் சோகம் நிலவுகிறது. இதையடுத்து இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மூன்று நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
அஜித் பவார் கடின உழைப்பாளியான தலைவர் என்றும், எந்த சூழலிலும் தைரியம் இழக்காதவர் என்றும் முதல்வர் பட்னாவிஸ் புகழாரம் சூட்டினார். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகப்பெரியது என்றும், அவரது மறைவு தனிப்பட்ட முறையிலும் தனக்கு பேரிழப்பு என்றும் கூறினார்.
