Noரயில் பயணிகளின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, முன்பதிவு அட்டவணை வெளியிடும் நடைமுறையில் இந்திய ரயில்வே முக்கிய மாற்றம் கொண்டு வந்துள்ளது. இனிமேல், ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்டவணை வெளியிடப்படும். தெற்கு ரயில்வேயில் இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

 

முன்னதாக, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே முன்பதிவு அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது. இதனால், கடைசி நேரத்தில் முன்பதிவு உறுதியாகாத பயணிகள் தங்கள் பயணத் திட்டம் குறித்து மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வந்தனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு, இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனப் பயணிகள் தரப்பிலிருந்து ரயில்வே துறைக்குத் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

 

பயணிகளின் கோரிக்கைகளை பரிசீலித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த மாதம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் முடிவில், முன்பதிவு அட்டவணை வெளியிடும் நேரத்தை 4 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக அதிகரிக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, ரயில்வே வாரியம் புதிய முன்பதிவு அட்டவணை வெளியிடும் நடைமுறையை அறிவித்துள்ளது.

 

புதிய நடைமுறையின்படி:

 

அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முன்பதிவு அட்டவணை, முந்தைய நாள் இரவு 9 மணிக்கு தயாரிக்கப்பட வேண்டும்.

 

மதியம் 2 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 5 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும்.

 

இந்த நடவடிக்கையின் மூலம், காத்திருப்போர் பட்டியலில் (Waiting List) உள்ள பயணிகள் தங்கள் டிக்கெட்டின் நிலையை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும். இதன் வாயிலாக, கடைசி நேரப் பயணச் சிரமங்கள் தவிர்க்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

 

தெற்கு ரயில்வே வணிகப் பிரிவு, இந்த 8 மணி நேரத்திற்கு முன்பே அட்டவணை வெளியிடும் புதிய நடைமுறையைப் பின்பற்றுமாறு அனைத்து ரயில்வே கோட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த மாற்றம் லட்சக்கணக்கான ரயில் பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version