மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே 15) முதல் மே 20-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் முதல் கட்டமாக நாளை அமீரகம் செல்லும் அவர், அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்துப் பேசுகிறார். குறிப்பாக, போர் நெருக்கடியால் சர்வதேச அளவில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனைகளை நடத்த உள்ளனர்.

அமீரகப் பயணத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அடுத்தடுத்துச் செல்கிறார். இப்பயணத்தின் முக்கிய அங்கமாக, மே 19-ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெறும் 3-வது இந்தியா-நார்டிக் (India-Nordic) உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். நார்வே, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நார்டிக் நாடுகளின் பிரதமர்களைச் சந்திக்கும் பிரதமர், பசுமை ஆற்றல், தொழில்நுட்பம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் நிலவும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளார்.

இறுதிக்கட்டமாக இத்தாலி செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசுகிறார். 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் நார்வே செல்வது மற்றும் போர் நெருக்கடி நிலவும் சூழலில் அமீரகத்தைச் சந்திப்பது என இப்பயணம் சர்வதேச அரசியலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இப்பயணத்தின் போது கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version