ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமின் பைசரன் சுற்றுலாத்தலத்தில் கடந்த 22-ந் தேதி பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி இந்தியர்கள் 25 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தலைநகர் டெல்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்துள்ளது.

ஆனால் இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை. காரணம், பீகார் மாநிலம் மிதிலாஞ்சல் பகுதியில் உள்ள மதுபானியில், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்திற்கான விழாவில் கலந்து கொண்டது தான். அந்த நிகழ்ச்சியில் தனது உரையைத் தொடங்குவதற்கு முன்னர் பஹல்காம் படுகொலைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், “பயங்கரவாதியையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் இந்தியா அடையாளம் கண்டு கண்காணித்து தண்டனை வழங்கும். பூமியின் எல்லை வரை சென்று அவர்களை துரத்திப் பிடிப்போம்” என்று ஆவேசமாக கூறியது மிகப்பெரும் நம்பிக்கையை தந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

அதேபோன்று பஹல்காம் படுகொலை குறித்த தகவல்கள் கிடைத்த உடனேயே தனது சவுதி அரேபிய பயணத்தை இடையிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்தது வரவேற்கத்தக்கதே.

ஆனால் அனைத்துக்கட்சிக் கூட்டம் என்பது இந்தியாவின் பலகோடி மக்களின் பிரதிநிதித்துவம் அல்லவா?. (10 எம்.பி.க்களுக்கு மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.) அத்தகைய கூட்டத்தில் தானே பிரதமர் இருந்திருக்க வேண்டும். “பஹல்காம் படுகொலைகளை அரசியல் கண்ணோட்டத்தில் அணுகாதீர்கள், ஒன்றுபட்டு எதிரியை வீழ்த்த வேண்டிய தருணம் இது” என்று பிரதமர் பீடத்தில் இருந்து அவர் பேசியிருக்க வேண்டும். ஏன் அவ்வாறு செய்யவில்லை? அதேசமயம் தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக எல்லா கட்சிகளும் பேசியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. (வேறு எப்படியும் பேசி இருக்க முடியாது)

சவுதி அரேபிய பயணத்தை இடையிலேயே முறித்துக் கொள்ளத் தெரிந்த பிரதமருக்கு, பீகார் நிகழ்ச்சி அவ்வளவு முக்கியமாக தெரியக் காரணம் என்ன?. இன்னும் ஓரிரு மாதங்களில் அங்கு சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது என்பதாலா? இப்படி யோசிப்பதே வேதனையைத் தருகிறது.

2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் நடந்த பிறகு அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். ப.சிதம்பரம் உள்துறை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மேலும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். கேள்விகளை எதிர்கொண்டார். நாட்டு மக்களுக்கு உரிய தகவல்களையும், போதிய நம்பிக்கையையும் வழங்கினார்.

அதேபோன்று இப்போது நடந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஏனென்றால் பிரதமரின் பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் கூட்டம், சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, பாகிஸ்தான் தூதரை வெளியேற்ற உத்தரவு, வாகா எல்லையில் கதவுகள் அடைப்பு, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு என்று அடுக்கடுக்கான உத்தரவுகள் பறந்தன. பாராட்டுகிறோம்.

ஆனால் ஜனநாயக ரீதியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்று இருக்கும்பட்சத்தில் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் கட்சி பேதங்களைத் தாண்டி அனைவரும் ஓரணியில் நிற்கிறார்கள் என்ற செய்தி உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும். இந்த வாய்ப்பை ஏன் பிரதமர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

#pahalgam #AllPartyMeeting

Share.
Leave A Reply

Exit mobile version