ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த சில வாரங்களாக நிலவி வரும் “திறந்தவெளிப் போர்” சூழலில், காபூலில் உள்ள ஒரு மருத்துவமனை தரைமட்டமாக்கப்பட்டு 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று காபூலில் உள்ள போதைப்பொருள் பழக்கத்திற்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை மீது பாகிஸ்தான் விமானப்படை திடீர் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் மருத்துவமனையின் அனைத்துப் பகுதிகளும் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. ஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷராபத் ஜமான் கூறுகையில், “இந்தத் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளைப் பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் செய்தித் தொடர்பாளர் மொஷாரப் ஜைதி, “எந்த மருத்துவமனையையும் நாங்கள் தாக்கவில்லை, இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது” என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தரப்பில், காபூல் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் தலிபான் மற்றும் தீவிரவாதிகளின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் ராணுவ முகாம்களை மட்டுமே துல்லியமாகத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல் இரு நாடுகளுக்கும் இடையே எல்லை மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. பாகிஸ்தானில் நடந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணில் செயல்படும் தீவிரவாதிகளே காரணம் எனப் பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. இதற்குப் பதிலடியாக ஆப்கானிஸ்தான் படைகளும் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்கி வருவதால், எல்லையில் இதுவரை இல்லாத அளவுக்கு போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
ரஷீத் கான் வருத்தம்: இந்தநிலையில், இது மிகுந்த வத்தமளிப்பதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். கல்வி வளாகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவைகள் மீது தாக்குதல் நடத்துவது ஒரு போர்க்குற்றம் என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக ஐநா சபை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ள அவர், ஆப்கன் மக்களுடன் தான் துணை நிற்பதாகவும் கூறியுள்ளார்.
