வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை, அந்த நாட்டின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
வங்காளதேசத்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் இழந்தது. நேற்றைய கடைசிப் போட்டியில் 291 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி, 279 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கம்ரான் அக்மல், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தற்போதைய நிலையை நினைத்து வேதனை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, “பாகிஸ்தான் கிரிக்கெட்டை நீங்கள் ஒரு கேலிக்கூத்தாக மாற்றிவிட்டீர்கள். இப்போதுள்ள நிலையில் நெதர்லாந்து அணி கூட நம்முடன் விளையாடி, நம்மைத் தோற்கடித்து டெஸ்ட் அந்தஸ்து பெற நினைக்கும். களத்தில் உங்களால் ஒரு தொடரை வெல்ல முடியவில்லை என்றால், அப்புறம் எப்படி முன்னேறுவீர்கள்? இருதரப்பு தொடரையே வெல்ல முடியவில்லையென்றால், இனிமேல் ஐசிசி கோப்பைகளைத் திருடிக்கொண்டுதான் வீட்டுக்கு வரப்போகிறீர்களா?” என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், முக்கியமான போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த கேப்டன் ஷாகீன் அப்ரிடியின் முடிவையும் அவர் விமர்சித்தார். “பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ஏன் முதலில் பந்துவீசினார்கள்? வங்காளதேச வீரர் லிட்டன் தாஸ் நிதானமாக ஆடியதால் 290 ரன்களோடு அவர்கள் நின்றனர், இல்லையென்றால் 350 ரன்களை எட்டியிருப்பார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் அணியின் போட்டிகளை இனி ஒரு சீரியஸான ஆட்டமாக பார்க்க முடியாது. இது ஒரு காமெடி சீரிஸ் போல் ஆகிவிட்டது என்றும் விமர்சித்தார்.

