ஆப்கானிஸ்தானில் அகதிகளுடன் சென்ற பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 79 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக அறிவித்தது. இதனால் தலீபான்கள் கை ஓங்கிய நிலையில், அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். இதனால் மீண்டும் அங்கு தலீபான்கள் ஆட்சி அமைந்து 5 ஆண்டுகளாக நீடிக்கிறது.
தலீபான்களின் கிடுக்குப்பிடி ஆட்சி அதிகாரத்துக்கு பயந்து மக்கள் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஈரான், துருக்கி, அரபு அமீரகத்துக்குள் அகதிகளாக தஞ்சமடைந்தனர். ஆனால் ஆப்கானிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் அந்த நாடுகளில் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அதிகபட்சமாக பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஆப்கானிஸ்தான் அகதிகள் தடாலடியாக வெளியேற்றப்பட்டனர்.
அதேப் போல ஈரானில் தஞ்சமடைந்த ஆப்கானிஸ்தான் அகதிகள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சிலர் நேற்று பேருந்து மூலம் நாடு கடத்தப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெரத் அருகே அப்பேருந்து சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற லாரி மீது மோதியது. இதில் நிலைத்தடுமாறி சாலையில் சரிந்து விழுந்த பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவியதில், அகதிகள் வெளியேற முடியாமல் தவித்தனர். சிறிது நேரத்தில் பேருந்து தீக்கிரையானதில், சிக்கி 19 குழந்தைகள் உட்பட 79 அகதிகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.