அமெரிக்கா இனி ரஷ்யாவை நேரடி அச்சுறுத்தலாகக் கருதாது என்றும் அதற்கு பதிலாக அதனுடன் ஒத்துழைக்கும் என்றும் புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையில் திருத்தம் செய்துள்ளது.
2014 ஆம் ஆண்டு கிரிமியாவை இணைத்து 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து அமெரிக்கா ரஷ்யாவை ஒரு பெரிய அச்சுறுத்தலாக தொடர்ந்து பார்த்து வருகிறது. இருப்பினும், டிரம்ப் நிர்வாகம் அதன் புதிய தேசிய பாதுகாப்பு உத்தியில் முக்கிய திருத்தத்தை செய்துள்ளது. புதிய கொள்கையின் கீழ், அமெரிக்கா இனி ரஷ்யாவை நேரடி அச்சுறுத்தலாகக் கருதாது, அதற்கு பதிலாக அதனுடன் ஒத்துழைக்கும் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் , ரஷ்யா அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை வரவேற்றது, இது ஒரு நேர்மறையான முயற்சி என்று கூறியது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது,”நாம் காணும் மாற்றங்கள் பல வழிகளில் நமது தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப உள்ளன” என்று கூறினார். ரஷ்ய அதிபர் புதினிடம் அதிபர் டிரம்ப் கருணை காட்டுவது இது முதல் முறை அல்ல. டிரம்ப் இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் புதினை வெளிப்படையாகப் பாராட்டியுள்ளார் என்று கூறியுள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவு, முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஒபாமா மற்றும் பைடன் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாகத் தெரிகிறது. 2014 இல் கிரிமியாவை ரஷ்யா இணைத்து 2012 இல் உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து, அமெரிக்கா தொடர்ந்து ரஷ்யாவை ஒரு பெரிய அச்சுறுத்தலாகக் கருதி வருகிறது. அப்போதிருந்து, அமெரிக்கா தொடர்ந்து ரஷ்யாவை ஒரு ஆக்கிரமிப்பாளராகவும், உலகளாவிய ஒழுங்கை சீர்குலைப்பவராகவும் வகைப்படுத்தி வருகிறது. இருப்பினும், டிரம்ப் நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட புதிய தேசிய கொள்கை, நெகிழ்வான யதார்த்தவாதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐரோப்பா நாகரிகத்தின் சரிவை எதிர்கொள்கிறது என்பதை இந்த மூலோபாயம் எச்சரிக்கிறது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் முன்னுரிமை என்றும், ரஷ்யாவுடன் மூலோபாய ஸ்திரத்தன்மையை நிறுவுவதே வாஷிங்டனின் குறிக்கோள் என்றும் அது கூறுகிறது.
மேலும் அமெரிக்காவுடன் பல ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டதன் மூலம் சீனா பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும், அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு போட்டியாக வளர்ந்துள்ளது.எனவே அந்நாட்டுடன் பொருளாதார உறவுகளை நெறிப்படுத்த வேண்டியுள்ளது. முக்கிய வளங்களின் விநியோகத்தை கட்டுப்படுத்துவது அறிவுசார் சொத்துரிமை திருட்டு போன்ற செயல்களில் சீனா ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்க பாதுகாப்பு கொள்கையில் ரஷ்யா, அமெரிக்காவுக்கு நேரடி அச்சுறுத்தல் நாடு என்று கூறப்பட்டிருந்த நிலையில், அது தற்போது நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
