ஈரானில் நிலவி வரும் அசாதாரணமான சூழலில், அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கன் மாகாணத்தில் உள்ள மினாப் என்ற இடத்தில் உள்ள ‘ஷஜாரே தய்யபே’ என்ற சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளி மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை மாணவிகள் பள்ளியில் இருந்தபோது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு வான்வழித் தாக்குதலின் ஒரு பகுதியாக இந்தப் பள்ளி நேரடியாகத் தாக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தொடக்கத்தில் பலி எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், தற்போது அது 85 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு நீதித்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
“தற்காப்பு இல்லாத அப்பாவிச் சிறுமிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்” என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சர்வதேச சமூகத்திடம் முறையிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் நடவடிக்கை குறித்து அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. மினாப் நகரில் ஈரானின் புரட்சிகர காவல் படையின் தளம் அமைந்துள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
