2 விநாடிகளில் மணிக்கு 750 கிலோ மீட்டர் வேகத்தைத் தொட்டு சீனாவின் அல்ட்ரா ஹை ஸ்பீட் ரயில் புதிய சாதனை படைத்துள்ளது.
சீனாவின் தேசிய பல்கலைகழகத்தில் உள்ள பாதுகாப்பு ஆய்வு குழுவினர், சக்திவாய்ந்த காந்தங்களில் இயங்கும் மேக்லாவ் ரக ரயிலை உருவாக்கியுள்ளனர். இந்த ரயிலானது, வழக்கமான ரயில் போல் தண்டவாளத்தில் செல்லாமல், இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட காந்த சக்தியை கொண்ட தண்டவாளத்தின் மேல் மிதந்தபடி இயங்கக் கூடியதாகும்.
இந்த ரயிலை 400 மீட்டர் தூரம் வரை அமைக்கப்பட்டுள்ள மேக்லாவ் தண்டவாளத்தின் மீது இயக்கி பல்கலைகழக குழுவினர் பரிசோதித்தனர். அப்போது அந்த ரயில், 2 விநாடிகளில் மணிக்கு 750 கிலோ மீட்டர் வேகத்தை தொட்டது.
மின்னல் போல பாய்ந்து, 400 மீட்டர் தூரத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் கடந்தது. இதன்மூலம், மேக்லாவ் ரயில்களில் மிக வேகத்தில் செல்லக்கூடிய ரயில் இது என்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் போக்குவரத்துக்கு விடப்பட்டால், சீனாவின் வெகு தூரத்தில் உள்ள நகரங்களுக்கும் மிக எளிதில் பயணிக்க முடியும். இதனால் போக்குவரத்து நேரம் வெகுவும் மிச்சப்படும் என சீன மக்கள் நம்புகின்றனர்.
இதே பல்கலைகழக ஆய்வு குழுவினர், சுமார் 10 ஆண்டுகால ஆராய்ச்சி மேற்கொண்டு மேக்லாவ் ரயில் வகைகளை உருவாக்கியுள்ளனர். இது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்தாண்டின் தொடக்கத்தில் இதே ஆய்வுக் குழுவினர், மணிக்கு 648 கி.மீ. வேகத்தை தொடும் ரயிலை பரிசோதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
