வங்கதேசத்தில் மாணவர் தலைவரான மொட்டலேப் ஷிக்தர் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் தலையில் சுட்டதில் பலத்த காயமடைந்த அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலக காரணமாக இருந்த மாணவர் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த ஷெரீப் உஸ்மான் ஹாடி என்ற மாணவர் தலைவர், கடந்த 12-ம் தேதி சைக்கிள் ரிக்‌ஷாவில் செல்லும்போது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தலையில் சுட்டுவிட்டு தப்பினர். டாக்கா மருத்துவமனையிலும், பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து, வங்கதேசத்தில் பெரும் கலவரம், வன்முறை சம்பவங்கள் நடந்தன.

இந்நிலையில், மொட்டலேப் ஷிக்தர் (32) என்ற மற்றொரு மாணவர் தலைவர் மீது இன்று துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. தேசிய குடிமக்கள் கட்சி (NCP)-ன் தொழிலாளர் முன்னணியின் மத்திய ஒருங்கிணைப்பாளரான இவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், குல்னா நகரின் மஜித் சரணி பகுதியில் ரிக்‌ஷாவில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். தலையில் பலத்த காயமடைந்த மொட்டலேப் ஷிக்தர், ஆபத்தான நிலையில் குல்னா மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஷிக்தரின் தலையின் இடது பக்கத்தில் சுடப்பட்டதாகவும், இதனால் அதிக ரத்தப் போக்கு இருந்ததாகவும், மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வங்கதேச செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து குற்றவாளிகளைக் கண்டறிய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version