டிட்வா புயலின் கோர தாண்டவத்தில் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627ஐ தாண்டியுள்ளது.

அண்மையில் வங்கக் கடலில் இலங்கை அருகே உருவான டிட்வா புயல் அந்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் இதுபோன்ற இழப்போ, சேதமோ ஏற்பட்டதில்லை என்றநிலையில் மிகப்பெரிய பாதிப்பை டிட்வா புயல் ஏற்படுத்தி உள்ளது.

இலங்கைக்கு  ‘ஆப்பரேஷன் சார்பந்து’ திட்டத்தின் கீழ் இந்தியா பல்வேறு வகையில்  உதவிகள் அளித்து வருகிறது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், நடமாடும் மருத்துவமனை, தற்காலிக பாலம் போன்றவற்றுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மோப்ப நாய்கள் களத்தில் இறங்கி பணியாற்றினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் செயல்படும் நடமாடும் மருத்துவமனைகள் மூலம் இதுவரை 1,250 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், 5 பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், 3 இரும்புப் பாலங்கள் அமைத்து தந்துள்ளதாவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த புயலால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627ஐ தாண்டியுள்ளதாக இலங்கை பேரிடர் துறை தெரிவித்துள்ளது. சுமார் 21.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய 200க்கும் மேற்பட்டோரை தேடும் பணி நடந்து வருவதாகவும், இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version