ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா முன்மொழிந்துள்ள திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுனெ ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

நான்கு ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் முக்கிய அங்கமாக ரஷ்ய அதிபர் புதினை நேரில் அழைத்து போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் பேசினார். அதேபோன்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் நேரில் அழைத்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் போர் நிறுத்த முயற்சியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனிடையே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக வரி விதிப்பு நடைமுறையை கையில் எடுத்து அதிரடி காட்டினார் அதிபர் டிரம்ப்.

மேலும், போரை நிறுத்தும் அடுத்தகட்ட முயற்சியாக 28 அம்ச சமாதான திட்டத்தை அதிபர் டிரம்ப் முன்மொழிந்தார். அமெரிக்காவின் சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தநிலையில், நீண்ட நாட்களாக ரஷ்யா வலியுறுத்தி வரும் கோரிக்கைகள் அடங்கிய திட்டமாக சமாதான ஒப்பந்தம் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்தார். இந்தநிலையில், போர் நிறுத்த சமாதான திட்டத்தை வரும் 27ம் தேதிக்குள் உக்ரைன் ஏற்க வேண்டுமென்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

இதனிடையே அமெரிக்காவின் சமாதான திட்டம் குறித்து உக்ரைன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இடையே சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. உக்ரைன் அதிபர் அலுவலக உயரதிகாரி ஆன்ட்ரி யெர்மாக்  மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

சமாதான திட்டம் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும், அதில், சில திருத்தம் செய்ய வேண்டும் என்றும் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவை வலியுறுத்தி உள்ளன. இதுதொடர்பாக அமெரிக்க குழுவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version