ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் கடந்த டிச.14ம் தேதி அந்நாட்டில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ‘சானுக்கா’ விழா கொண்டாடப்பட்டது. இதனால் கடற்கரை பகுதியில் எப்போதும் இல்லாத வகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த இருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினர். துப்பாக்கி சத்தத்தை கேட்டதும், அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இதனிடையே, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் சம்பவ இடத்திலேயே சுட்டனர். அதில் 50 வயதான சஜித் அக்ரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மற்றொருவரான சஜித்தின் மகன் நவீத் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சஜித் அக்ரம் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் என்பது தெரியவந்தது.
இந்தநிலையில், துப்பாக்கிச்சூட்டு சம்பவம் எதிரொலியாக ஆஸ்திரேலியாவின் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலத்தில் புதிய துப்பாக்கிச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
இதன்படி துப்பாக்கிகளின் உரிமைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படும். பொது இடங்களில் பயங்கரவாத அடையாளங்களைக் காட்டுவது குற்றமாகும். ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான காவல்துறையின் அதிகாரம் கூடும்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின்தான் பயங்கரவாதம் மற்றும் பிற சட்டத் திருத்தங்கள் அதிகாலையில் நிறைவேற்றப்பட்டன. பதினெட்டுக்கு எட்டு என்ற வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறியது.
முதல்வர் கிறிஸ் மின்ஸ், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் குடியிருப்பாளர்கள் மட்டுமல்ல, மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அரசாங்கம் ஆன அனைத்தையும் செய்யும் என்று உறுதியளித்தார்.
