வருகிற செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வரவுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். இவருடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.
டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. எனினும், சீன அதிபரின் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
சீன அதிபர் ஜி ஜின்பிங் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டிற்காக இந்தியா வந்திருந்தார். அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட எல்லை மோதல்களால் தூதரக உறவுகளில் பதற்றம் நிலவியது.
கடந்த 2020 ஜூன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 21 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். எனினும், டெம்சுக் மற்றும் டெப்சாங் பகுதிகளில் படைகளை விலக்கிக் கொள்ளும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவில் நடைபெற்ற எஸ்.சி.ஓ மாநாட்டின் போதும், 2024 ஆம் ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற 16வது பிரிக்ஸ் மாநாட்டின் போதும் பிரதமர் மோடியும் ஜின்பிங்கும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
