அல்ஜீரியா தலைநகர் அல்ஜியர்ஸின் புறநகர்ப் பகுதியான முகமதியாவில் உள்ள அரசு குழந்தைகள் நலக் காப்பகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து, சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 3:30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்து, அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆதரவற்ற குழந்தைகள், கைவிடப்பட்டவர்கள் மற்றும் சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் தங்கியிருந்த இந்த இல்லத்தில், தீ மளமளவென வகுப்பறைகளுக்கும் நடைபாதைகளுக்கும் பரவியது. கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 19 பேர் பலத்த தீக்காயங்களுடனும், மூச்சுத் திணறல் பாதிப்புடனும் மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற அல்ஜீரியாவின் சிவில் பாதுகாப்புப் படையினர், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மீட்புப் பணியின் போது, சிக்கியிருந்த 5 மாற்றுத்திறனாளி குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை, அல்ஜீரியாவின் பிரதமர் சிஃபி கிரீப் நேரில் சென்று ஆய்வு செய்தார். விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பாக அல்ஜீரியா நாட்டுப் பாதுகாப்பு மற்றும் நீதித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் தங்கியிருந்த காப்பகத்தில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம், அந்த நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version