இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் கடந்த 13-ம் தேதி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் ஆணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் விளக்கமளித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரானின் ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட சொரோகா மருத்துவமனையை பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று பார்வையிட்டார். இதன் பின்னர் பேட்டியளித்த அவர், நாம் அனைவரும் இழப்புகளை சந்தித்துள்ளோம். எனது குடும்பமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எனது மகனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. அது போருக்காக நாங்கள் கொடுத்த விலையாகும். இதனால் எனது குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஒரு வீராங்கனையை போல் எனது மனைவி இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொண்டார்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், நெதன்யாகுவின் பேச்சுக்கு இஸ்ரேல் மக்கள் சிலர் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போரின் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் நெதன்யாகு தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பதாக பலர் விமர்சித்து வருகின்றனர்.