ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா குறிவைத்து அழித்தது. ஆனால், அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களை மீண்டும் அதிநவீன வசதிகளுடன் கட்டமைக்கும் வேலைகளை பாகிஸ்தான் செய்யத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா நடத்திய இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாகள் தகர்த்து எறியப்பட்டன. நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் அரண்டு போன பாகிஸ்தான், இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் மக்கள் வசிப்பிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் டிரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்த முயற்சித்தது. பாகிஸ்தானின் இந்த முயற்சியை இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் முறியடித்தது. அதுபோக, பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாத பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது. இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.
இந்தநிலையில், பாகிஸ்தான் மீண்டும் தனது சதி செயலை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பல அழிக்கப்பட்ட போதிலும், கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத ஏவுதளங்கள் இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது .
இதுகுறித்து BSF இன்ஸ்பெக்டர் ஜெனரல் அசோக் யாதவ் கூறுகையில், “பல ஏவுதளங்கள் அழிக்கப்பட்டன, ஆனால் சில இன்னும் செயலில் உள்ளன, பயங்கரவாதிகள் அங்கு உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் பெரும்பாலும் பயங்கரவாதிகளை எல்லையைத் தாண்டி அனுப்ப முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், எங்களிடம் நவீன கண்காணிப்பு கருவிகள் உள்ளன, மேலும் முக்கியமான பகுதிகளில் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஊடுருவல் முயற்சியையும் நிறுத்துவதே எங்கள் நோக்கம்” என்று அவர் கூறினார்.
BSF டிஐஜி விக்ரம் குன்வார் கூறுகையில், எல்லை அருகே இருந்த பல முகாம்கள் அழிக்கப்பட்ட பிறகும், பாகிஸ்தான் அவற்றை மேலும் ஆழமான பகுதிகளுக்கு நகர்த்தியுள்ளதாகவும், அங்கு சுமார் 100 முதல் 120க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இருப்பதாகவும், 72 பயங்கரவாத ஏவுதள முகாம்கள் செயல்பட்டு வருவதாகவும், தற்போது சியால்கோட் மற்றும் ஸஃப்பர்வால் பகுதிகளில் சுமார் 12 முகாம்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும், இருப்பினும் அவை எல்லைக்கு நேரடியாக அருகில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“அதேபோல், எல்லையிலிருந்து வெகு தொலைவில் உள்ள பிற பகுதிகளில் சுமார் 60 ஏவுதளங்கள் செயலில் உள்ளன,” இருப்பினும், கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் உள்ள பல ஏவுதளங்கள் இன்னும் அப்படியே உள்ளன, மேலும் சில பயங்கரவாதிகள் அங்கு தொடர்ந்து உள்ளனர்… எந்தவொரு ஊடுருவல் முயற்சிகளையும் முறியடிக்க நாங்கள் பாடுபடுகிறோம்… சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை, பாகிஸ்தானின் எந்தவொரு நடவடிக்கைக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று கூறினார்.
ஸ்ரீநகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அசோக் யாதவ், இந்த ஏவுதளங்களில் சுமார் 100 முதல் 120 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக நம்பப்படுகிறது. வானிலை மோசமாகவும், தெரிவுநிலை குறைவாகவும் இருக்கும்போது அவர்கள் கடக்க வாய்ப்புகளைத் தேடுவதால் எண்ணிக்கை மாறிக்கொண்டே இருக்கிறது. “பாகிஸ்தான் எப்போதும் குளிர்காலத்திற்கு முன்பு பயங்கரவாதிகளை அனுப்ப முயற்சிக்கிறது. ஒவ்வொரு முயற்சியையும் நிறுத்துவதே எங்கள் வேலை” என்று அவர் கூறினார். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை உன்னிப்பாகக் கண்காணிக்க, குறிப்பாக பந்திபோரா மற்றும் குப்வாரா போன்ற உணர்திறன் மிக்க பகுதிகளில், பிஎஸ்எஃப் மற்றும் ராணுவம் நவீன கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்துகின்றன என்று அவர் விளக்கினார்.
