டிட்வா புயலால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பாகிஸ்தான் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் காலாவதியானவை என தெரிய வந்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், வரலாறு காணாத அளவில் இலங்கையை கடுமையான சேதத்திற்கு உள்ளாக்கி உள்ளது. அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயல் பாதிப்பையடுத்து, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே, தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்களால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்தள்ளது. நூற்றுக்கணக்கானோர் மாயமாகி உள்ளனர்.
வெள்ள பாதிப்பில் இருந்து இதுவரை மீட்கப்பட்டுள்ள சுமார் 1.50 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இலங்கையில் நிகழ்ந்த மிக மோசமான இயற்கை பேரிடர் இது என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, இதுவரை 53 டன் அத்தியாவசிய பொருட்களையும், மீட்புப் படையினரையும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இதேபோன்று, சீனாவும் இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது.
இந்தநிலையில், இலங்கைக்கு உதவும் விதமான பாகிஸ்தானும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இதுதொடர்பாக இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கையின் பேரிடர் காலத்தில் பாகிஸ்தான் துணை நிற்கும் என்று கூறி, இலங்கைக்கு அனுப்பி வைத்த நிவாரண பொருட்களின் புகைப்படத்தை குறிப்பிட்டிருந்தது. இது, தற்போது பேசு பொருளாகி உள்ளது. பாகிஸ்தான் அனுப்பிய நிவாரண பொருட்களின் காலாவதி தேதி அக்டோபர் மாதம் 2024ம் ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவசரகால தேவைக்காக அனுப்பிய பல பொருட்கள் பயன்படுத்த முடியாதவையாகவும், காலாவதியாகவும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை, கவனத்தில் கொண்ட இலங்கையின் பேரிடர் நிர்வாகம் மற்றும் வெளி விவகார துறை, பாகிஸ்தானிடம் தூதரக அளவிலும், வேறு வழிகளிலும் தனது அதிருப்தியை தெரியப்படுத்தி உள்ளது. வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு காலாவதியான நிவாரண பொருட்களை அனுப்பியது தவறான செயல் என்று பாகிஸ்தான் நடவடிக்கை விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
