வங்கதேசத்தின் சத்குரா (Satkhira) மாவட்டம், ஆசாசுனி பகுதியில் இன்று மதியம் 1:52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியில் இருந்து சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலைக்கொண்டிருந்த நிலநடுக்கம், இந்திய எல்லையையொட்டிய நயாபஜார் பகுதிக்கு மிக அருகாமையில் நிகழ்ந்துள்ளது என வங்கதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மிக வலுவாக உணரப்பட்டன. கொல்கத்தாவின் பல பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். சுமார் 10 வினாடிகள் வரை இந்த அதிர்வுகள் நீடித்ததாகக் கூறப்படுகிறது.
மேற்கு வங்க சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த போது அதிர்வுகள் உணரப்பட்டதால், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக அவையிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.
வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா மற்றும் பிற பகுதிகளில் நிலநடுக்கத்தால் பீதி ஏற்பட்டாலும், இதுவரை உயிர்ச் சேதமோ அல்லது பெரிய அளவிலான கட்டிட பாதிப்புகளோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. இந்தியாவிலும் இதே போன்ற நிலைதான் நீடிக்கிறது. எனினும், வங்கதேச எல்லைக்கு அருகில் உள்ள சுந்தரவனப் பகுதிகளில் அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
