சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய பதிலடி வான்வழித் தாக்குதலில், 12க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தளங்கள் அழிக்கப்பட்டன.
.சிரியாவில் கடந்த 2019ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கப் படையினர் மீது பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் தாக்குதல்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. அங்குள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் சிரியாவின் உள்ளூர் படைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சிரியாவின் மத்தியப் பகுதியான பால்மைரா நகரில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படையினர் மீது கடந்த 13ம் தேதி ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் என மொத்தம் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 வீரர்கள் படுகாயமடைந்த நிலையில், பதில் தாக்குதலில் அந்தப் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இச்சம்பவம் அதிபர் டிரம்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசிய டிரம்ப்,இதற்குக் காரணமானவர்களைச் சும்மா விடமாட்டோம்; நிச்சயம் இதற்குப் பழிக்குப்பழி வாங்குவோம்’ என எச்சரித்திருந்தார்.
அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் வெளியிட்ட அறிக்கையில், ‘உலகில் எங்கு வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள், அமெரிக்கர்களைக் குறிவைத்தால், உங்களைத் தேடிக் கண்டுபிடித்து வேட்டையாடுவோம். உங்களின் எஞ்சிய வாழ்நாளைப் பயத்துடனே கழிக்க நேரிடும்’ என்று கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில், டிரம்ப் எச்சரித்தபடி ஐஎஸ்ஐஎஸ் தளங்கள் மீது அமெரிக்கா கடுமையான வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு Operation Hawkeye Strike என்று பெயரிட்டுள்ளதாக கூறியுள்ள அமெரிக்கா, எதிரிகளை வேட்டியாடும் இந்த நடவடிக்கை தொடரும் என்று குறிப்பிட்டுள்ளது.
