உண்மைச் சரிபார்ப்பு( fact-checkers), உள்ளடக்க கட்டுப்பாடு (content moderators), சட்ட அமலாக்கம் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கான விசா விண்ணப்பங்களை நிராகரிக்குமாறு டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய விசா விதிகள் தொழில்நுட்பத் துறையில் வெளிநாட்டு தொழிலாளர்களை, குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்திய தொழில்நுட்பத் தொழிலாளர்கள் H-1B விசாக்களை அதிகம் நம்பியுள்ளனர். இந்தப் புதிய சட்டத்தின் கீழ், H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் முந்தைய வேலைவாய்ப்பின் அடிப்படையில் விசாக்கள் மறுக்கப்படலாம். புதிய உத்தரவு, “அமெரிக்க கருத்துக்களை தணிக்கை செய்வதற்கு அல்லது தணிக்கை செய்ய முயற்சிப்பதற்கு பொறுப்பான அல்லது சம்பந்தப்பட்ட எவருக்கும் விசாக்களை மறுக்க” தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறது. இந்த உத்தரவு பத்திரிகையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைத்து வகையான விசாக்களுக்கும் பொருந்தும்.
இருப்பினும், அதன் முதன்மை இலக்கு, தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறைகளில் நிபுணர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாக்கள் ஆகும். விண்ணப்பதாரர்களின் தொழில்முறை பதிவுகள், LinkedIn சுயவிவரங்கள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகள், அவர்கள் உண்மைச் சரிபார்ப்பு, உள்ளடக்க மதிப்பீடு அல்லது சட்ட அமலாக்கம் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பதைத் தீர்மானிக்க உன்னிப்பாக ஆராயப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான சான்றுகள் விசா தகுதியிழப்புக்கு வழிவகுக்கும்.
H-1B விசா வைத்திருப்பவர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள், உள்ளடக்க மதிப்பீடு, உண்மைச் சரிபார்ப்பு மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு போன்ற வேலைகளை பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவிற்கு அவுட்சோர்ஸ் செய்கின்றன. இந்தப் புதிய கொள்கை ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை எதிர்மறையாக பாதிக்கலாம்.
அமெரிக்க குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் நிர்வாகம் வாதிடுகிறது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “அமெரிக்கர்களை தணிக்கை செய்ய முயலும் வெளிநாட்டினருக்கு எதிராக குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தை நிர்வாகம் பாதுகாக்கும் என்பதை இது தெளிவுபடுத்துகிறது. அமெரிக்கர்களை மௌனமாக்க தணிக்கையாளர்களாக பணியாற்ற வரும் வெளிநாட்டினரை நாங்கள் ஆதரிக்கவில்லை.”
இதற்கிடையில், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு வேலைகளை தணிக்கை என்று கருதுவது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையில் உள்ள வல்லுநர்கள், “நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு என்பது ஒரு பரந்த துறையாகும், இதில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம், மோசடி மற்றும் நிதி மோசடிகளைத் தடுப்பது போன்ற முக்கியமான உயிர்காக்கும் பணிகள் அடங்கும். இந்தத் துறையில் பணிபுரியும் உலகளாவிய ஊழியர்கள் அமெரிக்கர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்” என்று கூறுகிறார்கள்.
