இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், தனது முடிவை நாளை (ஜூன் 22) அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மற்றும் பிராந்தியத் தேர்தல்களில் ஆளும் தொழிற் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் ஸ்டார்மருக்கு எதிரான எதிர்ப்பு கட்சிக்குள் தீவிரமடைந்தது. தொழிற் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். சில அமைச்சர்கள் ராஜினாமா செய்ததால் நெருக்கடி அதிகரித்தது.
கெய்ர் ஸ்டார்மருக்கு போட்டியாகக் கருதப்படும் ஆண்டி பர்ன்ஹாம், அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அவரை அடுத்த தலைவராக்க வேண்டும் என தொழிற் கட்சியினர் பலர் விரும்புவதாகக் கூறப்படுகிறது. கட்சிக்குள் உட்கட்சி அழுத்தம் மற்றும் தனது செல்வாக்கு குறைந்து வருவதால் கெய்ர் ஸ்டார்மர் இந்த முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, தனது ராஜினாமா முடிவை நாளை (ஜூன் 22) அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

