உக்ரைன் நடத்தியதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் மாஸ்கோ பிராந்தியத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் அப்பகுதி ஆளுநர் ஆண்ட்ரேய் வோரோபியோவ் தெரிவித்துள்ளார்.
2022-ல் ரஷ்யா–உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து மாஸ்கோ பகுதியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் இது மிகவும் உயிரிழப்பை ஏற்படுத்திய தாக்குதலாகக் கருதப்படுகிறது.
ஆளுநர் வோரோபியோவ் தனது டெலிகிராம் பதிவில், மாஸ்கோவின் தெற்கே உள்ள செகோவ் (Chekhov) மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், தொழிற்பேட்டையில் பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதுடன், நிர்வாகக் கட்டிடம் மற்றும் மின்துணை நிலையமும் சேதமடைந்ததாகக் கூறியுள்ளார்.
மேலும், சோல்னிஷ்கோவோ (Solnyshkovo) கிராமத்தில் ஒரு வீடும், ஒரு வாகனமும் சேதமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, ஒரே இரவில் குறைந்தது 320 உக்ரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில் மாஸ்கோ மற்றும் லெனின்கிராட் பகுதிகளில் பறந்த ட்ரோன்களும் அடங்கும்.
லெனின்கிராட் ஆளுநர் அலெக்சாண்டர் ட்ரோஸ்டென்கோ, தங்கள் பகுதியில் 17 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார். கிராஸ்னி போர் (Krasny Bor) பகுதியில் கிடங்கு வளாகம் சேதமடைந்ததுடன், ரஷ்யாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான Wildberries-இன் கிடங்கும் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாக கூறினார்.
இதுபோல, ட்வெர் (Tver) பிராந்தியத்திலும் Wildberries நிறுவனத்தின் மற்றொரு கிடங்கு தாக்கப்பட்டதாக அப்பகுதி ஆளுநர் விட்டாலி கொரோலேவ் தெரிவித்தார்.
ரஷ்ய வீரர்களுக்கு ட்ரோன்கள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்கள் விற்பனை செய்யப்படும் தளமாக Wildberries செயல்படுகிறது என உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது. இதனால் அந்நிறுவனத்தின் கிடங்குகள் மற்றும் போக்குவரத்து வலையமைப்பை குறிவைத்து அண்மைக் காலமாக உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
மாஸ்கோ தாக்குதலுக்கு முன்பு, தெற்கு ரஷ்யாவின் கடற்கரையில் உக்ரைன் ட்ரோன் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். இதை பொதுமக்களை குறிவைத்த திட்டமிட்ட தாக்குதல் என்று ரஷ்யா குற்றம்சாட்டியது.
ஆனால், உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் கீழ் செயல்படும் Counter-Disinformation Center தலைவர் ஆண்ட்ரி கோவலென்கோ, ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளின் தவறான நடவடிக்கையாலேயே அந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், பொதுமக்களுக்கு உரிய எச்சரிக்கை வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை உக்ரைன் மீது ரஷ்யா 136 ட்ரோன்கள் மற்றும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. இதில் 117 ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதாகவும், ஒரு ஏவுகணை மற்றும் 14 ட்ரோன்கள் 14 இடங்களில் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தெற்கு துறைமுக நகரமான மைகோலைவ் (Mykolaiv) மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்தார். வடகிழக்கு நகரமான சுமி (Sumy) பகுதியில் குடியிருப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்ததாகவும், பில்ஹோரோட்-ட்னிஸ்ட்ரோவ்ஸ்கி (Bilhorod-Dnistrovskyi) நகரில் இருவர் காயமடைந்ததாகவும் உக்ரைன் அவசரகால சேவை தெரிவித்துள்ளது.
