ஷெரீஃப் உஸ்மான் ஹாடி உயிரிழப்பை தொடந்து வங்கதேசத்தில் மீண்டும் கலவரம் வெடித்துள்ள நிலையில், இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து வீழ்த்திய இளைஞர் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பங்களாதேஷில் மீண்டும் வன்முறைச் சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் டாக்காவில் உள்ள மசூதி ஒன்றிலிருந்து வெளியே வந்தபோது, அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளின் தாக்குதலுக்கு ஹாடி இலக்காகியிருந்தார்.

இதில் படுகாயமடைந்த அவர், சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (18) உயிரிழந்தார். 2024 போராட்டத்திற்குப் பின்னர் பங்களாதேஷ் தேர்தலுக்கான திகதியை அறிவித்த மறுநாளே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் அத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடத் தீர்மானித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அவரது மரணச் செய்தி வெளியானதும், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் டாக்காவில் திரண்டு போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். பின்னர் அவர்கள் பங்களாதேஷின் பிரதான பத்திரிகைகளான ‘தி டெய்லி ஸ்டார்’ (The Daily Star) மற்றும் ‘ப்ரோதோம் ஆலோ’ அலுவலகங்களுக்குக் கடுமையான சேதம் விளைவித்ததுடன், ஒரு கட்டிடத்திற்குத் தீயிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் தேவையின்றி வெளியே அருவதை தவிர்க்கவும், பயணங்களை குறைத்துக்கொள்ளவும் டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அவசர தேவைக்கு 01814654797 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் பதற்றம் நீடிப்பதால் காவல்துறையினரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version