கனடாவில் நடைபெறும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க, சிறப்பு விருந்தினராக இந்தியா சார்பில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக சைப்ரஸ், கனடா, குரோஷியா நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். அண்மையில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்குப் பின், பிரதமர் மேற்கொண்டுள்ள இந்த சுற்றுப் பயணம், உலக அரசியல் சதுரங்கத்தில் இந்தியா முன்னெடுக்கும் முக்கிய காய்நகர்த்தலாகப் பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் வியூகம் என்ன?
ஆபரேஷன் சிந்தூரால் அசர வைத்த இந்தியா
இஸ்ரேல் – ஈரான் இடையே போர்ச் சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. டிரோன்கள், ஏவுகணைகள் என முற்றிலும் நவீனமாக நிகழும் போரில், இரண்டு நாடுகளுமே சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளன. இஸ்ரேலின் அயர்ன் டோம், உலகின் சிறந்த வான்வழிப் பாதுகாப்பு அரண் என்று கருதப்படுகிறது. ஈரானின் ஏவுகணை ஆயுதங்களோ, அதிநவீன தொழில்நுட்பம் மிக்கவை. இவை இரண்டும் போரில் சந்திக்கும்போது இரண்டு நாடுகளிலும் பொதுக் கட்டுமானங்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால், நவீன ராணுவ தொழில்நுட்பம் என்ற இலக்கை நோக்கி முதல் சில அடிகளை மட்டுமே எடுத்து வைத்துள்ள இந்தியா, பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கி, நாட்டின் பொதுக் கட்டமைப்புகளுக்கு எவ்விதச் சேதமும் ஆகாதபடி காத்தது. பாகிஸ்தானில் பயங்கரவாத மையங்களை அழித்தபோதும், அருகில் இருந்த அணுசக்தி கிடங்கின் மீது எந்தவித தாக்குதலும் நடக்காதபடி துல்லியமாகத் தாக்கியது. அடுத்தபடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை, ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா முழுவதுமாக மீட்டுவிடும் எனப் பல நாடுகள் கணித்த வேளையில், பெஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியே ஆபரேஷன் சிந்தூர் எனத் தெளிவாக அறிவித்துப், போர் நடவடிக்கையை நிறுத்தியது. இந்தியாவின் ஆளுமை மிக்க இந்த நடவடிக்கை, உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் புகழையும் மரியாதையையும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. இதைத்தான் இந்தியா அறுவடை செய்ய நினைக்கிறது.
மோடியின் சைப்ரஸ் பயணம்
சைப்ரஸ் நாட்டில் நடந்த வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதான மாக்காரியோஸ் 3 கிராண்ட் கிராஸ் விருது வழங்கப்பட்டது. மோடி பதிலுக்கு அந்நாட்டின் அதிபர், நிகோஸ் கிறிஸ்டோவுக்கு, காஷ்மீரின் கைவினைப் பொருளான பட்டுக் கம்பளத்தையும், ஆந்திராவில் தயாரிக்கப்பட்ட வெள்ளியிலான கைப்பையையும் பரிசளித்தார். மேலும் மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலும் முக்கிய ஒப்பந்தங்கள் பல கையெழுத்தானது. இந்தியா – சைப்ரஸ் – கிரீஸ் நாடுகளின் கூட்டமைப்பு, இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பியா பொருளாதார வழித்தடம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இத்துடன், ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியா எடுத்த நடவடிக்கைகளை பிரதமர் விளக்கியிருக்கிறார். அனைத்தையும் கேட்ட சைப்ரஸ் எப்போதும் இந்தியாவுடன் நிற்பதாக தெரிவித்திருக்கிறது.
ஏன் சைப்ரஸ்?
இந்தியாவுக்கும் சைப்ரஸுக்கும் இடையில் நெடுங்காலமாக நல்லுறவு நீடித்து வருகிறது. ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக இணைக்க ஆதரவு அளிக்கும் நாடுகளில் சைப்ரஸும் ஒன்று. கடந்த 2002-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய், இந்நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்தார். அதன் பிறகு 23 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி சைப்ரஸ் சென்றதற்கு முக்கிய காரணம் உண்டு.
இந்தியாவுடன் நீண்ட காலமாக சைப்ரஸ் நட்பு நாடாக இருந்து வருகிறது. ஆனால் அதற்கு நேரெதிர் நிலைமை, சைப்ரஸுக்கும் அதன் அண்டை நாடான துருக்கிக்கும் உள்ளது. 1974-ம் ஆண்டு சைப்ரஸை திடீரென்று ஆக்கிரமித்த துருக்கி, நீண்ட போராட்டத்திற்குப் பின் வடக்குப் பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, தெற்குப் பகுதியை சைப்ரஸ் குடியரசுக்கு விட்டுக்கொடுத்தது. இதனாலேயே துருக்கியை வீழ்த்த பெரும் நாடுகளின் பலத்தை சைப்ரஸ் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
மோடியின் கணக்கு என்ன?
இதற்கு நேர்மாறாக, பாகிஸ்தானுடன் துருக்கி நட்புறவு காட்டி வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் போரின்போது, பதில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயன்படுத்தியதில் பெரும்பாலான டிரோன்கள், துருக்கியில் தயாரிக்கப்பட்டவை. இதனாலேயே சைப்ரஸின் எதிரி துருக்கி, இந்தியாவுக்கும் எதிரி ஆகிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற மூறையில், பாகிஸ்தானுடன் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் துருக்கிக்கு எதிரான சக்தியாக சைப்ரஸ் மாற இந்தியா உதவினால், பாகிஸ்தானுக்கு எதிரான அணியைக் கட்டமைக்க இந்தியாவுக்கு சைப்ரஸும் உதவும். இதுதான் பிரதமர் மோடியின் கணக்கு. இதைச் செயல்படுத்தவே ஜி7 மாநாட்டின் பயணத்தை ஒட்டி சைப்ரஸுக்கும் போயிருக்கிறார் பிரதமர் மோடி என்று கணிக்கின்றனர் உலக அரசியல் பார்வையாளர்கள்.