பால் என்றாலே நிறைய ஊட்டச்சத்து அதில் உள்ளது என்றுதான் நாம் நினைத்திருப்போம். குழந்தைப் பருவத்தில், ‘தினமும் ஒரு கப் சூடான பாலை குடித்து வந்தால் எலும்புகள் வலிமைப்பெறும்’ என்று பலரும் சொல்லி கேட்டிருப்போம்.
ஆனால் கடந்த சில தினங்களாகவே, பசும்பாலை விட இது நல்லது, அது நல்லது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீகன் பின்பற்றுவோர் இன்னும் ஒருபடி மேலே போய் ‘பசும்பாலே வேண்டாம், சோயா பால் குடியுங்கள்’ என்கின்றனர். இதற்கிடையே எருமைப்பால் முதல் ஒட்டகப்பால் வரை எல்லா பால் வகைகளும் சந்தைக்கு வந்துவிட்டன. இப்போ என்ன, பசும்பாலை குடிக்கலாமா வேணாமா என நீங்கள் யோசிக்கக்கூடும்.
இதுபற்றி Nutrition & Metabolism மருத்துவ இதழில் செய்யப்பட்ட ஆய்வில், மிதமான அளவில் அன்றாடம் பால் குடிப்பதன்மூலம் இதய நோய்கள், பக்கவாதம், டைப் 2 நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை தடுக்கப்படும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
பாலில் அதிக தரமான புரதம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி 12, பாஸ்பரஸ் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இவையாவும் நம் எலும்புகளின் ஆரோக்கியத்தை காப்பதுடன், தசைகளை வலிமைப்படுத்தி, நரம்புகளுக்கு புத்துணர்வூட்டுவது தெரியவந்துள்ளது. இத்தகைய பாலை என்ன வடிவில் உட்கொள்வது கூடுதல் பலன்களை கொடுக்கும்? யார் யார் எவ்வளவு பால் தினசரி குடிக்கலாம்? பார்க்கலாம்…
பாலை எப்போதும் காய்ச்சிக் குடிப்பதே சிறந்தது. அப்போதுதான், அதில் உள்ள தொற்றுக்களும் பாக்டீரியாவும் அழிக்கப்படும். அதேநேரத்தில் பாலை அதிகமாகக் கொதிக்கவைக்கத் தேவையில்லை. சில நிமிடங்கள் காய்ச்சினாலே போதுமானது.
5 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், தினமும் சராசரியாக 400 மி.லி பால் வரை அருந்தலாம் என்பதும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பால் அருந்தலாம் என்பதும் நிபுணர் பரிந்துரையாக உள்ளது.
இளம் வயதினர் மிதமான கொழுப்புள்ள பாலையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்த கொழுப்புள்ள பாலையும், வயதானவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலையும் குடிப்பது சிறந்தது.
கடையிலிருந்து வாங்கி வந்ததும், பாலை உடனே பயன்படுத்திவிட வேண்டும். அவசியம் ஏற்பட்டால், ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, பாக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் நாள் வரை பயன்படுத்தலாம். முடிந்த வரை தேவையானபோது வாங்கி, அப்போதே பயன்படுத்துவது நல்லது.
லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பவர்கள், இதய நோய் அல்லது கொழுப்புச்சத்து அதிகம் இருப்பவர்கள், புற்றுநோய் அபாயம் கொண்டவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்டவர்கள் போன்றோர் பால் குடிப்பதை தவிர்க்கலாம். அல்லது மருத்துவ ஆலோசனையுடன் அருந்தி வரலாம்.
